நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய மருத்துவமனை
Sivagangai King 24x7 |23 Aug 2024 1:05 PM GMT
சிவகங்கையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டிடம் மற்றும் ஆய்வகத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் முதல்நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டிடம் மற்றும் ஆய்வகத்தினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராகவும் முதன்மையான முதலமைச்சராகவும் திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில், கல்வி மற்றும் மருத்துவத்தினை தனது இரு கண்களாக கொண்டு, அதில் கூடுதல் கவனம் செலுத்தி, அதற்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்தும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக்காக்கின்ற பொருட்டு, மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 ஆகிய திட்டங்கள் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் சிறந்து விளங்கி வருகிறது. தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவையானது பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பிற நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் சிறந்த மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கு தமிழகத்தை நாடி வந்து, ஆரோக்கியமான சிகிச்சை பெற்று தங்களது பகுதிகளுக்கு நலமுடன் செல்கின்றனர். மேலும், மருத்துவத்துறையில் திட்ட செயல்பாடுகள் மட்டுமன்றி அனைத்து மருத்துவ கட்டமைப்புக்கள் மற்றும் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும், அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தவிர, அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்து, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்னுதாரணமாக சிவகங்கை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் பள்ளத்தூர் முதல்நிலை பேரூராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் மொத்தம் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆய்வகம் மற்றும் உபகரணங்களுக்கென, அரசின் பங்களிப்புத் தொகையாக ரூ.06.00 இலட்சமும், பொதுமக்களின் பங்களிப்பாக AMPL வள்ளியம்மை ஆச்சி சார்பில் ரூ.03.00 இலட்சமும், அதேபோன்று, கட்டிடத்திற்கென அரசின் பங்களிப்புத் தொகையாக ரூ.11.00 இலட்சமும், அருண் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ரூ.06.00 இலட்சமும், மேலும் சாய்வு தளம், பேவர் பிளாக் கற்கள் பதித்தல், குழாய் இணைப்புகள் போன்றவைகளுக்கென ஜவஹர் சார்பில் ரூ.01.50 லட்சமும், தோட்டம் மற்றும் தோட்டம் பராமரிப்பிற்கென நாச்சியப்பன் சார்பில் ரூ.01.00 இலட்சமும் நன்கொடையாக வழங்கப்பட்டு, பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கென அர்பணிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நன்கொடையாளர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இம்மக்கள் சேவையை தொடர்ந்து மேற்கொண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுடன் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று சிறப்பான மருத்துவ சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி, மக்களின் நலன் காக்கின்ற அரசாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்ச்யில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ) பிரியதர்ஷினி, பள்ளத்தூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சங்கர், AMPL வள்ளியம்மை ஆச்சி குடும்பத்தார்கள், ஜவஹர் குடும்பத்தார்கள், நாச்சியப்பன் குடும்பத்தார்கள், பள்ளத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் ருக்மணி, மருத்துவ நிலை அலுவலர் வள்ளியம்மை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story