தாட்கோ' கடனுதவி சலவை நிலையம் மாமல்லையில் சட்டசபை குழு ஆய்வு

தாட்கோ கடனுதவி சலவை நிலையம் மாமல்லையில் சட்டசபை குழு ஆய்வு
மாமல்லபுரத்தில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர், குழு தலைவர் நந்தகுமார் தலைமையில், அதன் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர்
தமிழக அரசின் 'தாட்கோ' எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு, மானியத்தில் கடன் உதவி அளிக்கிறது. மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியில், கடந்த 2022ல், அய்யப்பன் என்பவருக்கு, 2.25 லட்சம் ரூபாய் மானியம் மற்றும் 7.57 லட்சம் ரூபாய் கடன் அளிக்கப்பட்டது. அவர், நவீன இயந்திர சலவை நிலையம் அமைத்து, இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில், சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர், குழு தலைவர் நந்தகுமார் தலைமையில், அதன் செயல்பாடு குறித்து, நேற்று ஆய்வு செய்தனர். இயந்திரத்தில் ஆடைகளை இட்டு துவைப்பது, உலர்த்துவது, இஸ்திரி செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை கேட்டறிந்தனர். திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, சப் - கலெக்டர் நாராயணசர்மா, தலைமைச்செயலக அதிகாரிகள் உடனிருந்தனர். சட்டசபை குழுவினர் ஆய்விற்கு செல்லும்போது, வெகுசிலரே பங்கேற்பது, பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்து அலட்சியப்படுத்துவது என்பதே வழக்கமாக தொடர்கிறது. பொது நிறுவனங்கள் குழுவில் 18 உறுப்பினர்கள் உள்ள நிலையில், சலவை நிலைய ஆய்வில், நந்தகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஐந்து பேர் மட்டுமே பங்கேற்றனர். ஐந்து ரதங்கள் சிற்பங்கள் அருகில், கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம் செல்லும் சாலையில் சிற்பக்கூடங்கள் உள்ளன. இக்குழுவினர், சாலையை மறித்து கார்களை நிறுத்தி, சிலைகளை பார்வையிட்டனர். அதனால், பிற பயணியர் செல்ல இயலவில்லை. சட்டசபை குழுவினருக்கு, போக்குவரத்து விதிமுறைகள் பொருந்தாதா என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
Next Story