விருத்தாசலம் அருகே பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்தை புறக்கணித்து பெற்றோர்கள் போராட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி நடந்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்தனர். அப்போது பள்ளிக்கூடத்தின் மாணவிகளுக்கான கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் தண்ணீர் வசதி இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் புற்கள் முளைந்து மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. குடிநீர் வசதி சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததாலும், பள்ளி மேலாண்மை குழு வரவு செலவு கணக்கீடுகளை உறுப்பினர்களின் பார்வைக்கு கொண்டு வராததே கண்டித்தும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆகியோரை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தந்தைகளை நியமிக்காமல் மற்றவர்களை நியமித்ததை கண்டித்தும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொளஞ்சி தலைமையில் திடீரென நாங்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் துரை பாண்டியன், பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்ற பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் வருகின்ற செவ்வாய்க்கிழமை அன்று நாங்கள் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், பள்ளிக்கூடத்தின் முன்பு மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story