சேலம் மாநகராட்சி பகுதிகளில் தனியார் கழிவுநீர் வாகனங்கள் உரிமம் பெறுவது கட்டாயம்
Salem (west) King 24x7 |24 Aug 2024 12:19 PM GMT
ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தகவல்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் (செப்டிக் டேங்க்) கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் தனியார் கழிவு நீர் வாகன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் பேசியதாவது:- மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய எந்தவொரு சூழ்நிலையிலும் தனிநபரை நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ ஈடுபடுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பின்பற்ற தவறும் தனியார் ஒப்பந்ததாரர்கள், வாகன உரிமையாளர்கள் முதன்முறையாக மீறுவோறுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். 2-வது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வாகனத்தில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் கழிவுநீர் அகற்றும் பணியாளர்கள் பிரதிபளிப்பு ஆடைகள் (ஏப்ரான்) கம்பூட்ஸ், பாதுகாப்பு கையுறை, தலைக்கவசம், முகக்கவசம், கண்ணாடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதை வாகன உரிமையாளர்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெறுவது கட்டாயமாகும். தற்போது வரை பதிவு செய்து உரிமம் பெறாத வாகன உரிமையாளர்கள் வருகிற 10-ந்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனம் பறிமுதல் பதிவு செய்து உரிமம் பெறாத வாகனங்கள் கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ.25 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ.50 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும். எனவே தொடர்ந்து உரிமம் பெறாமல் செயல்படும் பட்சத்தில் வாகனம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் தொட்டியில் கழிவுநீர் அகற்றும் பணிகளுக்கு உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story