மரவள்ளி கிழங்கு விலை சரிவு விவசாயிகள் கவலை.
Paramathi Velur King 24x7 |24 Aug 2024 1:08 PM GMT
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு விலை சரிவு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர், ஆக.24- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.10ஆயிரம் வரை விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை சரிவடைந்து ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போதும் டன் ஒன்று ரூ.4 ஆயிரம் வரை சரிவடைந்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால் மரவள்ளி கிழங்கு விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story