கொளுத்தும் வெயிலில் குடிநீருக்காக காத்திருக்கும் பெண்கள்
Sivagangai King 24x7 |25 Aug 2024 2:54 AM GMT
இளையான்குடி சுற்றுவட்டார பகுதிக்கு பல நாட்களுக்கு ஒரு முறை வரும் காவிரி கூட்டு குடிநீரை பிடிப்பதற்காக கொளுத்தும் வெயிலில் முக்காடு போட்டுக்கொண்டு பெண்கள் காத்திருந்தனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திருச்சியிலிருந்து ராமநாதபுரம் வரை செயல்படுத்தப்படும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த தி.மு.க.,ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட நிலையில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து இத்திட்டத்தை முறையாக பராமரிக்காததால் குடிநீர் திட்ட குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்து தற்போது 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் வண்டிகளில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்கி வருகின்றனர். நேற்று இளையான்குடி காந்தி சாலை பகுதியில் குடிநீரை பிடிப்பதற்காக கொளுத்தும் வெயிலிலும் ஏராளமானோர் காலி குடங்கள் மற்றும் வண்டிகளுடன் தலையில் முக்காடு போட்டு காத்துக் கிடந்தனர்.
Next Story