வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
நத்தம், ஆவிச்சிப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி முதலமைச்சர் அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில் சனிக்கிழமை பிற்பகல் சுமார் 03.30 மணியளவில் வெடிமருந்து தயாரிக்கும் பணியின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல், முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்த குருசாமி என்பவர் மகன் கண்ணன் (எ) சின்னன் வயது 42 மற்றும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முனீஸ்வரன் (எ) மாசா வயது 30 ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Next Story