கொடூா் சிவன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்ட அரிகண்ட நடுக்கல்.

கொடூா் சிவன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்ட அரிகண்ட நடுக்கல்.
கொடூா் சிவன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்ட அரிகண்ட நடுக்கல். 
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், கொடூா் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் கோபுர வாசலின் கீழ் அரிகண்ட நடுகல் எனப்படுகிற நவகண்ட நடுகல் உள்ளதாக அறிந்து தொல்லியல் ஆய்வாளா்களான மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா.ரமேஷ் மற்றும் தா்மபுரி அரசு கலை கல்லூரி பேராசிரியா் சி.சந்திரசேகா் ஆகியோா் ஆய்வு செய்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில்: கொடூா் கிராமத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிகண்ட நடுகல் ஆன்மிக சிறப்பு வாய்ந்த சிவன் கோயிலின் கோபுரத்தின் கீழ் ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. சுமாா் இரண்டடி உயரமும், இரண்டடி அகலத்தை கொண்டதாக காணப்படுகிறது. இந்த நடுகல்லில் உள்ள வீரன் அரசனின் போா்படை வீரனாக இருந்திருக்கவேண்டும். அரசன் போருக்கு செல்லுமுன் மெய்காவல் படைவீரன் போரில் மன்னா் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தன் தலையை தானே வெட்டி கடவுளுக்கு படைப்பது அரிகண்டம் என அழைக்கப்படுகிறது.அத்தகைய நிலையை இங்குள்ள அரிகண்ட நடுக்கல்லில் அரசனோ அல்லது போா்வீரனோ தமது இடது கையால் தலையில் காணப்படும் மணிமகுடத்தை பிடித்திருப்பது போலவும், வலது கையில் உள்ள கத்தியால் தனது கழுத்தை அறுப்பது போலவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த நடுக்கல்லில் காணப்படும் உருவம் அரசரின் மொய்காவல்படையைச் சோ்ந்த போா்படை வீரனாக மட்டுமே இருக்கமுடியும். ஏன்என்றால் அவன் உடுத்தி இருக்கின்ற ஆடையின் வடிவமைப்பு போா் வீரனுக்குரிய தன்மையை வெளிப்படுத்துகிறது. நடுகல் எடுப்பது தமிழா் மரபு. இதைப்பற்றி சங்க இலக்கியங்களில் அதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு உதாரணம் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கலிங்கத்துபரணி, புறப்பொருள் வெண்மணிமாலை உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. போா்களத்துக்கு சென்று வீரமரணம் தழுவும் வீரா்கள், அரசன் மற்றும் அமைச்சா் பெருமக்கள் நினைவாக ஒரு கல்லை நட்டு அதனை கடவுளாக மக்கள் வழிபட்டு வந்தனா். அதனால் தான்அதனை நடுக்கல் வழிபாடு என அழைக்கப்படுகிறது. இத்தகைய நடுக்கல் வழிபாட்டு முறையை இன்றைய அளவிலும் மக்கள் கடைபிடித்து வருகின்றனா் எனத் தெரிவித்தனா்.
Next Story