திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா சுவாமி சப்பரத்தில் பவனி

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா சுவாமி சப்பரத்தில் பவனி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். 2-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி தூண்டுகை விநாயகர் கோவில் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபம் சேர்ந்தனர். மாலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளியம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். ஆவணித் திருவிழாவின் 3-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் சுவாமி பூங்கடேயச் சப்பரத்திலும், அம்மன் கேடயச் சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வருகிறார்கள்.
Next Story