வேலை வாங்கித் தருவதாக மோசடி அரசு ஓட்டுநர் மீது வழக்கு
Sivagangai King 24x7 |27 Aug 2024 3:39 AM GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வேளாண் துறையில் பணிபுரியும் ஓட்டுநா் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை அருகே இலந்தங்குடிபட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(65). கடந்த 2017ம் ஆண்டு சிவகங்கையில் உள்ள வேளாண் பொறியியல் பிரிவு அலுவலகத்தில் ஓட்டுனராகப் பணிபுரிந்தாா். அப்போது, இவரது நண்பா் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அதே அலுவலகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்த மதுரை திருநகரை சோ்ந்த பரமகாா்த்தி இவரிடமிருந்து 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.2 லட்சம் பெற்றுள்ளார். இந்நிலையில், சுப்ரமணியன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாா். பரமகாா்த்தி தற்பொழுது விருதுநகரில் உள்ள வேளாண் பொறியியல் பிரிவு அலுவலகத்தில் ஓட்டுனராக பணிமாறுதலாகிச் சென்றுவிட்டாா். பரமகாா்த்தி உறுதியளித்தபடி, சுப்பிரமணியன் கூறிய நபருக்கு வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் காலம்கடத்தி வந்தாா். இதுகுறித்து சுப்பிரமணியன், சிவகங்கை குற்றவியல் நடுவா் நீதி (எண்- 1) மன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ், குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் முருகேசன் ஆகியோா், ஓட்டுநா் பரமகாா்த்தி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story