போலி வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்து கொடுத்த நபர் கைது

போலீசார் விசாரணை
பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு பகுதியில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்து கொடுத்த வாலிபரை VAO புகாரின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு பேரூராட்சி, கடைவீதி பகுதியில் எஸ்.எஸ்.எஸ் கம்ப்யூட்டர் சென்டரை அதை ஊரைச் சேர்ந்த முகமது சலீம்(33) என்பவர் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கம்ப்யூட்டர் சென்டரில், பல்வேறு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கு போலியான வாக்காளர் அடையாள அட்டையை முகமது சலீம் தயார் செய்து கொடுத்தது குறித்து தகவல் அறிந்த பென்னகோணம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது அரசு ஆவணங்களை போலியாக தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள மங்களமேடு போலீசார் முகமது சலீமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் வாக்காளர் அடையாள அட்டை மட்டும்தான் தயார் செய்து கொடுத்தாரா அல்லது, வேறு என்னென்ன ஆவணங்கள் இதுபோல போலியாக தயார் செய்து கொடுத்துள்ளார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story