விருத்தாசலம் பகுதி செங்கல் சூளைகளில் கொத்தடிமைகள் உள்ளனரா? குழந்தை தொழிலாளர்கள் பணி புரிகிறார்களா?

விருத்தாசலம் பகுதி செங்கல் சூளைகளில் கொத்தடிமைகள் உள்ளனரா? குழந்தை தொழிலாளர்கள் பணி புரிகிறார்களா?
அதிகாரிகள் திடீரென ஆய்வு
கடலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சீனியர் சிவில் நீதிபதி அன்வர் சாத் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அமலாக்கம் ஞானசேகரன, தாசில்தார்கள் விருத்தாசலம் உதயகுமார், ஸ்ரீமுஷ்ணம் சேகர் மற்றும் துறை அதிகாரிகள், கருவேப்பிலங்குறிச்சி போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவு அதிகாரிகள் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடி, வல்லியம் பகுதியில் உள்ள செங்கல் சூலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொத்தடிமைகளாக வைத்து கொடுமைப்படுத்துகிறார்களா, முன்பணம் எவ்வளவு வாங்கி உள்ளீர்கள், உங்களை தேவைப்படும் நேரங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கும் சுப காரியங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கும் சம்பந்தப்பட்ட செங்கல் சூலையின் உரிமையாளர்கள் அனுமதிக்கிறார்களா? குழந்தைகளை வைத்து வேலை வாங்குகிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் ஒரு சூலையில் வேலை பார்த்த ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த பால அருள்சாமி தம்பதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த அவரது மகளான ஆறு வயது சிறுமியிடம் பள்ளிக்கூடம் செல்லவில்லையா, ஏன் செல்லவில்லை, செங்கல் சூலையில் வேலை செய்கிறாயா என அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது அதற்கு அந்த குழந்தை நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்லவில்லை என தெரிவித்தார். மேலும் அந்த சிறுமியின் சகோதரரியான ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியின் பள்ளிக்கூடத்திற்கு தொடர்பு கொண்டு அந்த மாணவியிடம் செல்போனில் பேசினார்கள். அப்போது அந்த மாணவி எனது தங்கை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் பள்ளிக்கூடம் வரவில்லை என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா? உங்களுக்கு ஆதார் அட்டை ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என கேட்டறிந்தனர். இதேபோல அப்பகுதியில் உள்ள மற்ற செங்கல் சூலைகளிலும் ஆய்வு நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா என ஆய்வு செய்தனர். அதில் ஒரு இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பணிமனையில் வேலை செய்த சிறுவன் ஒருவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த சிறுவன் பள்ளிக்கூடம் செல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த பணிமனையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து எச்சரித்தனர் விருத்தாசலம் பகுதியில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகள் உள்ளனரா? குழந்தை தொழிலாளர்கள் பணி புரிகிறார்களா? என திடீரென அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story