இலவச வீட்டு மனை பட்டாவை கிராம கணக்கில் சேர்க்க கோரி நடக்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ்
Virudhachalam King 24x7 |27 Aug 2024 11:11 AM GMT
தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு
விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமுளை ஊராட்சி புதுக்குளம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருக்க இட வசதியின்றி தவித்து வந்த இவர்களுக்கு தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் கடந்த 1999 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 பேருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா இதுவரை அளவீடு எதுவும் செய்யாமல் கிராம கணக்கில் சேர்க்காமல் இருந்து வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து கிராம கணக்கில் சேர்க்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று 27 ம் தேதி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் சங்கம் சார்பில் விருத்தாசலம் ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனை அறிந்த விருத்தாசலம் ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில் நேற்று விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அமைதிப் பேச்சு வர்த்தைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் வெற்றிவேல் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயா பேரின்பன் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுத்து 17 நபருக்கும் பட்டா வழங்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தயாராக ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story