பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட இருவர் கைது
Dindigul King 24x7 |27 Aug 2024 4:01 PM GMT
நத்தம் ஆவிச்சிபட்டியில் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த வெடி விபத்தில் இருவர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட இருவர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் சின்னு மகன் செல்வம் (வயது 49). இவர் ஆவிச்சிபட்டி அருகே பூலாமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் அனுமதியின்றி வெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இந்த ஆலையில் ஆனந்தன் மகன் அருண் பிரசாத் (39) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் கோவில் காலணி தெருவை சேர்ந்த குருசாமி மகன் கண்ணன் என்ற சின்னன் (வயது 42), சிவகாசி அருகே விஸ்வ நத்தம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் முனீஸ்வரன் என்ற மாசா (வயது 30) இருவர் உடல் சிதறி பலியாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார் ஆங்காங்கே சிதறிக்கிடந்த இருவரின் உடல் பாகங்களையும் சாக்கு பையில் கட்டி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து வெடி விபத்தில் தொடர்புடைய பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் (49) என்பவரை நத்தம் அருகே ஏரக்காபட்டியில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றும் பட்டாசு ஆலை மேலாளர் அருண் பிரசாத் (39) என்பவரை நத்தம் வேம்பரளி அருகே காவலர் சோதனை சாவடியில் சோதனையின் போது போலீசார் கைது செய்து இருவரையும் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story