சட்ட விரோதமாக இந்திய பாஸ்போர்ட் எடுத்த இலங்கை அகதி கைது
Nagercoil King 24x7 |28 Aug 2024 3:36 AM GMT
வள்ளவிளையில்
குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவர் கிராமத்தில் இலங்கை அகதி ஒருவர் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதாக உளவுபிரிவு போலீசாரிடமிருந்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வள்ள விளையில் தங்கியிருந்த ஜார்ஜ் வாஷிங்டன் (37) என்பவரை கொல்லங்கோடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலூர் மாவட்டம் கருவேப்பம் பாடியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தான் இவரது தந்தை. 1985-ல் இலங்கை அகதியை திருமணம் செய்த பாஸ்கரன் இலங்கையில் ஜேசுதாஸ் என்ற பெயரில் குடியேறியுள்ளார். பின்னர் 1990 இலங்கையில் இனக் கலவரம் ஏற்பட்ட போது பாஸ்கரன் குடும்பத்துடன் இந்தியா வந்து சிவகாசி முகாமில் தங்கி உள்ளார். பாஸ்கரன் மகன் ஜார்ஜ்வாஷிங்டன் 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடியில். டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்துள்ளார். அப்போது உடன்படித்த வள்ள விளையை சேர்ந்த பெண்ணை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துள்ளார். பின்னர் வள்ள விளையில் வாடகை வாகனம் ஓட்டி வருகிறார். கணவன் மனைவி சேர்ந்து வெளிநாட்டிற்கு செல்ல கடந்த 2019 ஆண்டு பாஸ்போர்ட் எடுத்து உள்ளனர். இலங்கை அகதி ஒருவர் இந்திய பிரஜை போன்று பாஸ்போர்ட் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இது சம்பந்தமாக கொல்லங்கோடு 'வி' கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் வழக்கு பதிவு செய்து ஜார்ஜ் வாஷிங்டனை கைது செய்தனர்.
Next Story