விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க கட்டுப்பாடு

விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க கட்டுப்பாடு
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதுதொடா்பாக, அவா் மேலும் கூறியது: சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாக்கோல் பொருள்களைப் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளைப் பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு திருச்சி மாவட்ட மக்கள் கொண்டாட வேண்டும் என்றாா் ஆட்சியா்.
Next Story