ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் வாய் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு
Virudhachalam King 24x7 |28 Aug 2024 12:14 PM GMT
விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தம்
விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து மணிமுக்தாற்று பகுதிக்கு செல்லும் பாதையில் சுமார் 5க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பாதையின் அருகே உள்ள தனிநபர் ஒருவருக்கு சொந்தமான பகுதிக்கு செல்வதற்கு வழி இல்லை என கூறி அரசு புறம்போக்கு பாதையை ஆக்கிரமித்து உள்ள பகுதியை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட பாதை புறம்போக்கு இடத்தை அகற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் நகராட்சி சார்பில் அதிகாரிகள் சென்றபோது ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வழக்கு தொடர்ந்த அந்த நபர் நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பாதையை மீட்டு தர வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் பேரில் இன்று நகரமைப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், நகர மன்ற உறுப்பினர் கருணா முன்னிலையில், விருத்தாசலம் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்திருந்த 2 ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் வாய் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தியும் கேட்காததால், சிறிதளவு பகுதியை மட்டும் அகற்றம் செய்து விட்டு மீதமுள்ள பகுதியை இன்று அளவீடு செய்து அகற்றுவதாக கூறி சென்று விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story