டயர் வெடித்து மினிவேன் - லாரி கவிழ்ந்தது!
Thoothukudi King 24x7 |28 Aug 2024 2:08 PM GMT
கயத்தாறு அருகே டயர் வெடித்து மினிவேன்-லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தர்பூசணிகள், மீன்கள் சாலையில் சிதறிக்கிடந்தன
கயத்தாறு அருகே டயர் வெடித்து மினிவேன்-லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தர்பூசணிகள், மீன்கள் சாலையில் சிதறிக்கிடந்தன. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நவுபல் (வயது 38). மினி வேன் டிரைவரான இவர் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தர்பூசணி, வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் புறப்பட்டார். அதிகாலை 4.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடியிருப்பு நாற்கர சாலையில் மினி வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது, திடீரென்று வேனின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் வேன் நிலைதடுமாறி சாலையில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் நவ்பல் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். மேலும் வேனில் இருந்த தர்பூசணி, வெங்காயம் ஆகியவை சாலையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அதில் ஏராளமானவை நசுங்கிவிட்டன. இந்த விபத்து குறித்து அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த நவ்பலை மீட்டு சிகிச்கைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீன் லாரி விபத்து இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து சேலத்திற்கு மீன்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை பத்தினம்திட்டாவை சேர்ந்த கபீர்முகம்மது ஓட்டினார். கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வந்த போது, லாரியின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் கபீர்முகம்மது லேசான காயத்துடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த மீன்களும் சாலையோரத்தில் சிதறிக்கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
Next Story