குளச்சல் வங்கியில் நள்ளிரவில் இடைவிடாது ஒலித்த வங்கி அலாரம் 

குளச்சல் வங்கியில் நள்ளிரவில் இடைவிடாது ஒலித்த வங்கி அலாரம் 
போலீஸ் ஆய்வு
குமரி மாவட்டம் குளச்சல் நகரின் மையப் பகுதியில் அரசின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் வங்கி பணியை முடித்துவிட்டு பூட்டி சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென வங்கியின் எச்சரிக்கை அலாரம் ஒலித்துக் கொண்டிருந்தது. இதனால் பீதி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளச்சல் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு வீரர்களை வரவழைத்து வங்கியில் கொள்ளை முயற்சிகள் ஏதாவது நடந்ததா என சந்தேகத்தின் பேரில் வங்கி வளாகத்தை சுற்றிலும் சோதனை மேற்கொண்டனர்.      ஆனால் அதற்கான எந்த தடயங்களும் இல்லை. தொடர்ந்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு வீரர்கள் ஆய்வு செய்தபோது வங்கி உள்ளே இருந்து மின்சார பொருள் கருகிய நாற்றம் வந்தது.         தீயணைப்பு வீரர்கள் வங்கி மேலாளர் சம்மதத்துடன், பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் தொடர்ந்து நடத்திய சோதனையில் எச்சரிக்கை அலாரத்தின் கண்ட்ரோல் பேனில் இருந்து வாடை வீசியது. இதனை அடுத்து அங்கு வந்த வங்கி எலக்ட்ரீசியன் ஆய்வு மேற்கொண்டதில், கண்ட்ரோல் பேனலில் புகுந்த கரப்பான் பூச்சியால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக எச்சரிக்கை அலாரம் தொடர்ந்து ஒலித்தது தெரிய வந்தது. உடனே மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு அலாரம் சீரமைக்கப்பட்டது.
Next Story