கள்ளக்காதலி வேறொருவருடன் போனில் பேசியதால் ஆத்திரத்தில் அடித்துக் கொன்றேன்
Virudhachalam King 24x7 |28 Aug 2024 3:46 PM GMT
கம்மாபுரம் கொலை வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் மனைவி வேம்பு (வயது 34), செங்கல் சூளை தொழிலாளியான இவர் விருத்தாசலம் பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரை காணவில்லை என இவருடைய உறவினர்கள் வேம்பு செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் போன் செய்துள்ளனர். அப்போது கம்மாபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் சிவா (30), என்பவர் போனை எடுத்து எனது வீட்டில் வேம்பு பிணமாக கிடக்கிறாள், அவளை நான் கொலை செய்து விட்டேன் என கூறியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான கம்மாபுரம் போலீசார் சிவா வீட்டில், சோதனையிட்ட போது வேம்பு அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இந்நிலையில் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் மது போதையில் மயங்கி கிடந்த சிவாவை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வேம்புவை சிவா அடித்து கொலை செய்தாரா? வேம்புவிற்கும் சிவாவுக்கும் என்ன தொடர்பு, என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சிவா கொடுத்த வாக்குமூலத்தில் எனக்கும் வேம்புவிற்கும் தொடர்பு இருந்து வந்தது. செங்கல் சூலையில் வேலை பார்த்துவிட்டு அவ்வப்போது என்னுடன் வந்து எனது வீட்டில் தங்கி விட்டு செல்வார். அவரது வீட்டில் இருந்து போன் செய்தால் இரவு நேரம் ஆகிவிட்டது, பஸ் கிடைக்கவில்லை எனக் கூறிவிட்டு என்னுடனே தங்கி விடுவார். இந் நிலையில் கடந்த 26 ஆம் தேதி என்னுடன் வந்து தங்கி இருந்தார். அன்று மதியம் இருவரும் நாங்கள் மது குடித்தோம். அப்போது வேம்பு விற்க்கு ஒரு போன் வந்தது. அதில் ஆண் நபர் ஒருவருடன் வேம்பு பேசினார். அப்போது போனில் பேசியவன் யார் என நான் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உன்னால் நான் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை, ஆனால் நீ மற்றவர்களுடன் போனில் பேசுகிறாய் எனக் கூறிவிட்டு, ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த மண்வெட்டி காம்பை எடுத்து ஓங்கி அடித்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் வேம்பு மயங்கி விழுந்தார். நான் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்துவிட்டு வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். இதனால் நான் கருவேப்பிலங்குறிச்சி சென்று விட்டேன். வேம்புவின் போன் என்னிடம் தான் இருந்தது. இந்நிலையில் மறுநாள் 27ஆம் தேதி மதியம் பரமேஸ்வரி என்பவர் வேம்புவின் செல்போன் எண்ணுக்கு போன் செய்தார். போனை எடுத்து நான் பேசிய போது வேம்பு எங்கே? நீ ஏன் போனை எடுக்கிறாய் என கேட்டார். அதற்கு நான் அவரை திட்டி விட்டு அவர் எனது வீட்டில் இறந்து கிடக்கிறார். நான் அவரை அடித்துக் கொலை செய்து விட்டேன் என்று கூறிவிட்டேன். இவ்வாறு சிவா கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். தொடர்ந்து சிவாவை போலீசார் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலிக்கு ஆண் நபர் ஒருவர் போன் செய்ததால் சந்தேகத்தில் அவரை அடித்துக் கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story