விருத்தாசலம் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக கிரியாசக்தி பொறுப்பேற்பு

விருத்தாசலம் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக கிரியாசக்தி பொறுப்பேற்பு
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை
விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஆரோக்கியராஜ் பணி மாறுதல் பெற்று பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக சென்றதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த கிரியாசக்தி, அங்கிருந்து மாறுதல் பெற்று விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இவரை விருத்தாசலம், பெண்ணாடம், கம்மாபுரம், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி, ஆலடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி கூறுகையில் விருத்தாசலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தொய்வு ஏற்படாமல் துரிதமாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், கஞ்சா, லாட்டரி, போன்ற சட்ட விரோத செயல்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விருத்தாசலம் பகுதி முழுவதும் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், குற்றம் நடக்காமலும், நடந்த குற்றங்களை விரைவில் கண்டுபிடிக்கவும் பொதுமக்கள், ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எப்பொழுதும் காவல்துறையை அணுகலாம். காவல் நிலையத்தில் தங்கள் புகார்கள் மீது திருப்தி கிடைக்கவில்லை என்றால் உடனடியாக என்னை நேரில் அணுகி தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story