பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
Virudhachalam King 24x7 |29 Aug 2024 12:07 PM GMT
விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டத்தில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விருத்தாசலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியாசக்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் முருகேசன், மங்கலம்பேட்டை சந்திரசேகரன், பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் சந்துரு அரசு நெறிகாட்டு வழிமுறைகள், விதிமுறைகளை வாசித்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி பேசியதாவது:- விநாயகர் சிலை அமைப்பதற்கு மற்றும் அதனை எடுத்துச் செல்வதற்கு கண்டிப்பாக வருவாய்த்துறை காவல்துறை அனுமதி பெற வேண்டும். ரசாயன கலவை கலக்கப்படாத விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை செய்யும் மற்றும் இருப்பு வைத்திருக்கும் இடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விநாயகர் சிலை அமைப்பு குழுவினர் கண்டிப்பாக சிலை வைக்கும் நாளிலிருந்து சிலையை கரைக்க எடுத்துச் செல்லும் நாள் வரை 24 மணி நேரமும் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். 10 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகள் நிறுவுவதை அனுமதிக்க கூடாது. கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் மசூதி பகுதிகளில் சிலை வைக்க அனுமதிக்க கூடாது. விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது பிரச்சனை செய்ய வாய்ப்புள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெறும் பகுதிகளில் சிசிடிவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிலை ஊர்வலத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்புவது, வண்ணப் பொடிகள், வண்ணக் கலவைகள் கலந்த தண்ணீரை பொதுமக்கள் மீது தெளிப்பது போன்றவைகளுக்கு அனுமதி கிடையாது. மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். சிலை ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழா அமைப்பாளர்கள் தங்களது ஆதார் கார்டு நகல் மற்றும் செல்போன் எண்களை காவல்துறை அனுமதி பெறும் போது கொடுக்க வேண்டும், என விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியாசக்தி ஆலோசனைகள் வழங்கினார். இதில் விருத்தாசலம் மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம், ஆலடி போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் விழா அமைப்பு நிர்வாகிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story