வட மதுரைக்கு அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி

வட மதுரைக்கு அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி
வட மதுரைக்கு அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி
நத்தத்திலிருந்து கோபால்பட்டி வழியாக வடமதுரை செல்லக்கூடிய அரசு பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து கோபால்பட்டி,விளக்கு ரோடு வழியாக வி.எஸ். கோட்டை, மார்க்கம்பட்டி, கம்பிளியம்பட்டி,அக்கரைப்பட்டி,காணாப்பாடி வழியாக வடமதுரைக்கு தினமும் அரசு பஸ் காலை,மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்தது. இதனால் நத்தம் கோபால்பட்டி மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள், விவசாயிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் அரசு பஸ்ஸில் சென்று வந்தனர். நத்தம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாததால் எரியோடு அருகே உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு ஏராளமான மாணவ மாணவிகள் தினமும் சென்றனர்.மேலும் வடமதுரை ரெயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய ரெயில் பயணிகளும் இதனால் பயனடைந்தனர். இந்த நிலையில் திடீரென முன்னறிவிப்பு இன்றி அரசு பஸ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த காளி ரத்தினம் என்பவர் கூறுகையில்: நத்தத்திலிருந்து கோபால்பட்டி,வி.எஸ். கோட்டை வழியாக அரசு பஸ்ஸில் செல்லும்போது சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் வடமதுரைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை இருந்தது.தற்போது திடீரென முன்னறிவிப்பின்றி கடந்த ஒரு ஆண்டுகளாக இந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் இந்த பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திண்டுக்கல் வந்து வடமதுரைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.இதனால் 55 கிலோ மீட்டர் சுற்றி செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் கல்லூரிக்குச் செல்லக்கூடிய மாணவ மாணவிகள் தொழிலாளர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளிலும் சேர் ஆட்டோவிலும் பயணம் செய்கின்றனர்.இதனால் பொருளாதார ரீதியாக பாதிப்பும் ஏற்படுகிறது.ஆகவே மாணவ மாணவிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி முன் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட அரசு பஸ்ஸை போக்குவரத்து துறை அதிகாரிகள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Next Story