விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் - கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
Sholavandan King 24x7 |30 Aug 2024 1:12 AM GMT
விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனவே, பொது மக்களுக்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது. 1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. 2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். 3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். 4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். 6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள்- வைகை, கீழ் தோப்பு, ஒத்தக்கடைகுளம், வாடிப்பட்டி, குமாரம் கண்மாய், மேலக்கால், அய்யனார் கோவில் ஊரணி, குண்டாறு, மறவன்குளம் கண்மாய், மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், தேவன்குறிச்சி கண்மாய், மண்கட்டி தெப்பக்குளம், வைகை தைக்கால் பாலம், திருப்பரங்குன்றம் செவந்திக்குளம் கண்மாய், அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கண்மாய், திருமங்கலம் சிவரக்கேட்டை கமண்டலநதி, மேலூர் கொட்டாம்பட்டி சிவன் கோயில் தெப்பம். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு - செய்ய வேண்டியவை, சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள். சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள். சுற்றுச்சூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும். அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்கக் கூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும். பிரசாத விநியோகத்திற்கு மக்கும்/மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும். பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள் . அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். எல்.இ.டி பல்புகள் போன்ற சுற்றுச்சூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும். செய்யக்கூடாதவை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த வேண்டாம். சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயணப் பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த வேண்டாம். சிலைகளின் மேல்பூச்சிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற இரசாயன சாயங்கள்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டாம். பண்டிகையின் போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த வேண்டும். அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாம். ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த வேண்டாம். வண்ணப்பூச்சுக்கள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட ஒருமுறையே உபயோகித்து தூக்கியெறியக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம். ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் துறை கண்காணிப்பாளர், மதுரை மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மதுரை ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.
Next Story