சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி
Dindigul King 24x7 |31 Aug 2024 4:44 AM GMT
ஒட்டன்சத்திரம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி வைத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, புதியதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம், என்ற வகையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு விவசாயிகள் நலம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்கள், தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. பொதுவிநியோக திட்டத்தில் மானிய விலையில் பொருட்கள் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.10,500 கோடி நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகம் பயனடையும் வகையில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு, நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 53,899 பயனாளிகளுக்கு ரூ.193.77 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியிலேயே குடிமைப்பொருட்கள் பெற ஏதுவாக புதியதாக 50 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 130 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் என ஆகமொத்தம் 180 நியாயவிலைக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், 48 முழுநேர நியாயவிலைக் கடைகளும் 126 பகுதிநேர நியாயவிலைக்கடைகளும் என ஆகமொத்தம் 174 நியாயவிலைக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மண்டலத்தில் 33 நியாயவிலைக் கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 16.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 2 லசத்தி 89 ஆயிரத்தி 591 விண்ணப்பங்களில் 93 ஆயிரத்தி 396 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 52 ஆயிரத்தி ,794 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 8 ஆயிரத்தி 858 விண்ணப்பங்களில் 3 ஆயிரத்தி 933 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சரிபார்ப்பு பணி முடிவடைந்தவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது. என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் காந்திநாதன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுபாஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story