ஆலங்குடியில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
Alangudi King 24x7 |1 Sep 2024 6:32 AM GMT
ஆலங்குடியில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
ஆலங்குடி அரசமரம் பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த ஜூன் 30ம் தேதி மாலை முகமூடி அணிந்தவாறு திரிந்த இரு மர்ம நபர்கள், கையில் அரிவாளை வைத்தபடி அருகில் இருக்கும் பெட்டிக்கடை, ஜவுளிக்கடை, பூக்கடை மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் கண்ணாடி உள்ளிட்டவற்றை தாக்கி உடைத்ததோடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்தனர். இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆலங்குடி போலீசார், வருவதற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ரகளையில் ஈடுபட்ட கல்லாலங்குடி இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் லெனின் (எ) பாவா (22), புதுகை அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள பழைய ராசாப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் தயாநிதி (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவுப்படி, லெனின் (எ) பாவா (22), தயாநிதி (20) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
Next Story