மீண்டும் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் : பக்தர்கள் அதிர்ச்சி!
Thoothukudi King 24x7 |2 Sep 2024 2:51 AM GMT
திருச்செந்தூரில் கடற்கரை பகுதியில் மீண்டும் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது ஆவணித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடலில் பக்தர்கள் புனித நீராடியபோது, அவர்களது உடலில் அரிப்பு ஏற்பட்டது. இதுபற்றி அங்கு கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து பணியாளர்கள் உடனடியாக வந்து பார்த்தபோது, ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது தெரியவந்தது. இதில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது. அதை பணியாளர்கள் எடுத்து கடற்கரை பகுதியில் தோண்டி புதைத்தனர். மேலும் சில சிறிய அளவிலான ஜெல்லி மீன்களையும் பிடித்து கடலுக்குள் விட்டனர். இந்த ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு தோல் நோய் அபாயமும் ஏற்படுகிறது. எனவே கடலில் குளிக்கும் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. இந்தநிலையில் ஜெல்லி மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story