கன்டெய்னர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து!
Thoothukudi King 24x7 |2 Sep 2024 2:54 AM GMT
எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் கொட்டிய குளிர்பான பாட்டில்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானில் இருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு, கன்டெய்னர் லாரி ஒன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு நேற்று அதிகாலையில் புறப்பட்டது. தூத்துக்குடி அருகே கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த சேட்டையன் (41) என்பவர் லாரியை ஓட்டினார். கிளீனராக தூத்துக்குடி ஆசீர்வாதநகரைச் சேர்ந்த மனோஜ்குமார் (23) என்பவர் இருந்தார். இந்த லாரி நெல்லை வழியாக தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை வந்து, அங்கிருந்து தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் ெசன்று கொண்டிருந்தது. எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் பகுதியில் அதிகாலை 5.30 மணி அளவில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நான்கு வழிச்சாலையின் பக்கத்தில் உள்ள மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கிளீனர் மனோஜ்குமார் லேசான காயம் அடைந்தார். டிரைவர் சேட்டையன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. மேலும், லாரியில் இருந்த குளிர்பான பாட்டில்கள் சாலையில் சிதறியது. அதை அந்த வழியாக சென்ற ஏராளமான பொதுமக்கள் அள்ளிச்சென்றனர். விபத்து குறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு மதியம் 1 மணி அளவில் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story