வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!
Thoothukudi King 24x7 |2 Sep 2024 12:22 PM GMT
வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: இஸ்லாமியர்கள் கோரிக்கை!
வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். வக்பு வாரிய சொத்துக்களை இணையதளம் மூலமாக பதிவுசெய்து சீர்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய வக்பு கவுன்சில் அமைக்கப்படும் எனவும், மாநில வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் மதத்தை சேராத பிரதிநிதிகள் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு சொத்தை வக்பு வாரிய நிலமா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட ஆட்சியர் தீர்மானிப்பார் எனவும் சட்டதிருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வக்பு வாரிய நிர்வாகத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவரை எப்படி அனுமதிக்க முடியும், குழப்பத்தையும் சச்சரவையும் ஏற்படுத்தும் வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு, பாண்டிச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story