பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Perambalur King 24x7 |3 Sep 2024 1:00 AM GMT
பணி நிரந்தரம் வழங்க கோரிக்கை விடுத்து பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் தையல், இசை, கணினி அறிவியல், கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் போன்ற 8 பிரிவுகளில் சுமார் 16 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளனர். 5000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு, தொடர்ந்து பல்வேறு காலக்கட்டங்களில் சம்பள உயர்வு வழங்கப்பட்டு தற்பொழுது 10,000 ரூபாய் தொகுப்பூதியமாக பெற்று வருகின்றனர். தற்போது சுமார் 12000 பேர் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் இவர்களது பணியை நிரந்தரம் செய்யப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் புதிய அரசு அமைந்து சுமார் மூன்றரை ஆண்டு காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. அந்த வகையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையின் பொழுது திமுக அறிவித்தபடி தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற ஒற்ற கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story