கீரம்பூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்!
Namakkal King 24x7 |4 Sep 2024 11:41 AM GMT
சுங்க சாவடி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து கீரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டோரை, காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், கட்டுநர் சங்கம், நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கம், மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம், ஆகிய சங்கங்கள் இணைந்து, நாமக்கல் இராசாம்பாளையம் சுங்க சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்லராசாமணி தலைமை வகித்தார்.அப்பொழுது,நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அதேசமயம் தமிழகத்தில் காலாவதியான 22 சுங்க சாவடிகளை உடனடியாக மூட வேண்டும்,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்டன. கடந்த 7 மாதங்களாக மணல் குவாரிகள் செயல்படாததால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக தரமற்ற எம்.சாண்ட் பயன்படுத்த வேண்டிய நிலையில் அதன் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், எனவே கட்டுமான பணிகள் பாதிப்படையாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து சுங்க சாவடி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து கீரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மணல் லாரி உரிமையாளர்கள், மாட்டுவண்டி உரிமையாளர்கள், கட்டுநர் சங்கத்தினர், உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story