விருத்தாசலம் அருகே அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது
Virudhachalam King 24x7 |4 Sep 2024 6:04 PM GMT
குடும்ப பிரச்சினையில் தலையிட்டதால் ஆத்திரத்தில் கொன்றேன் என வாக்கு மூலம்
விருத்தாசலம் அருகே உள்ள சின்னக்கண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் செல்வமணி (55). திருமணம் ஆகி மனைவி உள்ள நிலையில் இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் மனைவி மற்றும் பேரப்பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். கட்டிட மேஸ்திரியான இவர் விருத்தாசலம் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்கள் கட்டி வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி சுப்பிரமணியன் (45). கொத்தனாரான இவருக்கும் திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது அண்ணனுடன் சேர்ந்து கட்டிட வேலையில் கொத்தனார் வேலை செய்து வந்தார். கட்டிடம் கட்டி முடித்ததில் சம்பளம் கொடுப்பதில் வாங்குவதில் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த சுப்பிரமணியன் தனது மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த செல்வமணி ஏன் இப்படி தகராறு செய்கிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் செல்வமணியை அசிங்கமாக திட்டி தாக்கியதுடன் வீட்டில் கறி வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து செல்வமணியின் இடுப்பில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த செல்வமணியை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் செல்வமணி இறந்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் டிஎஸ்பி கிரியாசக்தி மற்றும் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி மாமனார் ஊரான ஆலடியில் சுப்பிரமணியன் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கணவன் மனைவி எங்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை நடந்தபோது எனது அண்ணன் குறுக்கே வந்து என்னை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்து போதையில் இருந்த நான் கத்தியால் குத்திவிட்டு சென்று விட்டேன். பிறகு தான் தெரிந்தது என் அண்ணன் இறந்து விட்டார் என்று சுப்பிரமணியன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அண்ணனை தம்பி கத்தியால் குத்திக் கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தால் மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் டிஎஸ்பி கிரியா சக்தி உத்தரவின் பேரில் சின்னக்கண்டியங்குப்பம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story