சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கும் பொதுமக்கள்
Komarapalayam King 24x7 |5 Sep 2024 2:24 PM GMT
குமாரபாளையம் நகரின் பல இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை, பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரின் பல இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை, பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழா செப். 7ல் நடைபெறவுள்ளது. இந்நாளில் குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கொலு வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்து, கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் விட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் கொலு வைப்பதற்காக, பெரிய அளவிலான சிலைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவது வழக்கம். இதற்காக நகரின் பல இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர். இது குறித்து சிலை வியாபாரி கார்த்திகேயன் கூறியதாவது: விநாயகர் முழு முதற்கடவுளாக போற்றப்படுகிறார். எந்த ஒரு நல்ல செயல்களை செய்தாலும், எதை எழுதினாலும் விநாயகரை மனதில் எண்ணாமல், பிள்ளையார் சுழி போடாமல் தொடங்குவதில்லை. அப்படிப்பட்ட பிள்ளையாரை தங்கள் வீடுகளில் வைத்து கொழுகட்டை செய்து, பூஜை சாமான்களுடன் படையலிட்டு வழிபாடு செய்து, அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு கொழுகட்டையுடன் அன்னதானம் செய்வார்கள். இதற்காக பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கிறார்கள். இந்த சிலைகள் 50 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story