கோபால் நாயக்கர் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

கோபால் நாயக்கர் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் 223-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, விருப்பாட்சியில் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் சக்கரபாணி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில், அவர்களின் 223-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது திருவுருச்சிலைக்கு அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், விருப்பாட்சியை 40 ஆண்டுகள் ஆட்சி செய்து வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட, தமிழ்நாட்டின் மிகப் பெரிய விடுதலைப் பேராட்ட வீரர் குப்பளப் பாட்சா என்று திப்புசுல்தானாலும், கோபால் நாயக்கர் என்று மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் திருமலை குப்பளசின்னப்ப நாயக்கர். விருப்பாட்சியைச் சுற்றிலும் தன்னுடைய உறவினர்களை கொண்டு பல ஊர்களை உருவாக்கி ஆண்டு வந்தார். சிவகங்கை ராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருடன் இணைந்து வெள்ளையருக்கு வரி கட்டாமல் போராடினார். வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாட்சி கோபால் நாயக்கர். இவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பையும், படை பலத்தையும் வழங்கியவர். திண்டுக்கல் சீமை பாளையக்காரர்களை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை கோபால்நாயக்கர் உருவாக்கி, புலித்தேவன், தீரன்சின்னமலை, வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற பாளையக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்து போர் புரிந்தார். கும்பினிப்படையினரை எதிர்த்து நடைபெற்ற கொரில்லா தாக்குதலுக்கு கோபால்நாயக்கர்தான் காரணம் என்று கருதி அவரை 04.05.1801 அன்று வெள்ளையர்கள் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர். பின்னர் திண்டுக்கல் கோபாலசமுத்திரம் குளம் அருகே புளியமரத்தில் 05.09.1801 அன்று கோபால்நாயக்கர் துாக்கிலிடப்பட்டார். சாகும்போது கூட கொஞ்சமும் கலங்காமல் தன் மரணத்தைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட மாவீரன் கோபால்நாயக்கர் ஆவார். நாட்டின் விடுதலைக்காக கடந்த 05.09.1801-ஆம் ஆண்டு உயிர் தியாகம் செய்த கோபால் நாயக்கர் அவர்களின் நினைவு தினம்(செப்டம்பர் 5-ஆம் தேதி) அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருப்பாட்சியில், விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் நினைவு தினமான இன்று(செப்டம்பர் 5) அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்படுகிறது. இந்திய திருநாட்டின் நலனுக்காக பாடுபட்ட தலைவர்கள் வழியில், நாமும் செயல்பட்டு, நாட்டின் நலனை காப்பாற்ற இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள், விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் மணிமண்டபத்திற்கு வருகைபுரிந்து, அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, கோபால்நாயக்கர் சேவா சங்கம் தலைவர் செந்தில்குமார், செயலாளர் பெருமாள்சாமி, வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தஜோதீஸ்வரன், விருப்பாட்சி ஊராட்சி மன்ற தலைவர் மாலதி வெண்ணிலா மற்றும் ஏராளமான பொதுமக்கள், கலந்துகொண்டனர்.
Next Story