கழிவு மீன் ஆலைகளுக்கு எதிரான போராட்டம்:மக்கள் அதிகாரம் ஆதரவு!
Thoothukudi King 24x7 |6 Sep 2024 2:49 AM GMT
பொட்டலூரணி மக்கள் போராட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் தொடர்ந்து துணை நிற்கும் என்று அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளார் வெற்றிவேல் செழியன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள, துர்நாற்றம் வீசுகின்ற, மூன்று கழிவு மீன் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்தனர். பொதுமக்கனின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், ஒட்டு மொத்த பொட்டலூரணி மக்களும் 19.04.2024 அன்று நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாக முறையாகத் தொடர்புடைய அலுவலர்கள் அனைவருக்கும் அறிவிக்கை செய்தனர். முறையான பேச்சுவார்த்தைக்கு உரிய அலுவலர்கள் முன்வராமல் காவல் துறையினரை வைத்தே மிரட்டி வந்தனர். தேர்தல் புறக்கணிப்பை அறிவித்த பொதுமக்களே, தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர், பொதுமக்களோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக அழைப்புவிடுத்தும் முன்வரவில்லை. தேர்தலன்று அமைச்சர, பொதுமக்களைத தாக்கிக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் காவல் துறையின் துணையோடு, கூலிப்படையினரை அனுப்பினார். பொதுமக்கள் அதைக் கவனமாகக் கையாண்டு அமைதியை நிலை நாட்டினர். ஆளும் கட்சியினர், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், கழிவு மீன்நிறுவனங்கள் ஆகியோரின் கூட்டுச் சதியால் தொடர்ந்து பொதுமக்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பொட்டலூரணிப் பொதுமக்கள், கழிவு மீன்நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசு அனுமதியை இரத்து செய்ய வேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற இரட்டைக் கோரிக்கைகளுடன், தேர்தல் முதல் பொதுமக்கள் பந்தல் அமைத்து நாள்தோறும் உணவுக் கூடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன்,மாநில இணைச்செயலாளர், தோழர் குருசாமி, நெல்லை மண்டலச் செயலாளர் தோழர் செல்வம் ஆகியோர் பொட்டலூரணிப் போராட்டப் பந்தலுக்கு இன்று வருகைதந்து, போராட்டுக்குழுவினரிடம், மக்கள் அதிகாரம் அமைப்பு, கழிவுமீன் நிறுவனங்களை மூடும் வரை மக்களின் போராட்டத்திற்குத் தொடர்ந்து துணை நிற்கும் என்றுகூறி ஆதரவு தெரிவித்தனர்
Next Story