அனைத்து அரசு அலுவலகங்களில் ஒட்டுமொத்த துாய்மைப்பணி
Dindigul King 24x7 |6 Sep 2024 6:47 AM GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் ஒட்டுமொத்த துாய்மைப்பணி மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் ஒட்டுமொத்த துாய்மைப்பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி ஒவ்வொரு அலுவலக அறையாக நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பல்வேறு பணிகள் தொடர்பாக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருமளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், முன்னாள் ராணுவத்தினருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், துறை அலுவலர்களுக்கான மாதாந்திர கூட்டங்கள் என பல்வேறு கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான அரசு அலுவலகங்கள் சுத்தமாக இருக்கும்பட்சத்தில் அலுவலர்கள் ஆரோக்கியத்துடன், உற்சாகமாக பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசுப் பணிகள் விரைவாக நடைபெற்று மக்கள் பணிகள் நிறைவேறும். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் முழுவதும் தூய்மையாக வைக்க வேண்டும் என்ற நோக்கில், நம்மை சுற்றியுள்ள பகுதிகளை நாமே சுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்ற அடிப்படையில், இன்றைய தினம் அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள், அலுவலக மேற்கூரைகளில் தேங்கி கிடக்கும் இலை போன்ற சருகுகள், கழிப்பறைகள் மற்றும் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் குப்பைகள் மற்றும் செடி, கொடிகள் அனைத்தும், அனைத்துத்துறை அலுவலர்கள் மூலம் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பதிவேடுகள் அறையை சுத்தம் செய்வதன் மூலம் பழைய பதிவேடுகள் பாதுகாக்கப்படுவதுடன், பராமரிக்கவும், தேவைப்படும் பதிவேடுகளை உடனடியாக எடுக்கவும் எளிதாக இருக்கும். உடனடியாக சுத்தம் செய்யப்படும் பணிகள் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டன. அனுமதி பெற்று அகற்றப்பட வேண்டிய பழைய, பழுதடைந்த பொருட்கள், நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள் போன்ற பொருட்களை முறையான அனுமதி பெற்று அகற்றிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் ஒட்டுமொத்த துாய்மைப்பணி செய்யும் முன்பாக உள்ள நிலை புகைப்படம், துாய்மைப் பணி செய்யும்போது உள்ள புகைப்படம், துாய்மைப் பணி செய்து முடித்த பின்னர் உள்ள புகைப்படம் ஆகியவற்றை கூகுள்லிங்(google Link)-ல் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதேபோன்று அவ்வப்போது அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மை செய்து பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம், நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாக்க முடியும். இதற்கு அனைத்துத்துறை அலுவலர்களின் பங்களிப்பும், பொதுமக்கள் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே அலுவலத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மகளிர் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story