விருத்தாசலத்தில் சொகுசு காரை மணிமுக்தாற்றில் சிக்க வைத்த கூகுள் மேப்
Virudhachalam King 24x7 |6 Sep 2024 5:29 PM GMT
திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி
விருத்தாசலத்தில் இன்று மாலை சொகுசு கார் ஒன்று பூதாமூர் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த கார் திடீரென பூதாமூரில் இருந்து மணிமுக்தாற்றில் இறங்கும் பாதை வழியாக ஆற்றுக்குள் சென்றது. அப்போது அந்த கார் ஓட்டுநர் சென்னையில் இருந்து கூகுள் மேப் போட்டு, விருத்தாசலம் சித்தலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கூகுள் மேப் சித்தலூர் செல்ல விருத்தாசலம் புறவழிச் சாலை மற்றும் கடைவீதி சாலையை காட்டாமல் பூதாமூர் - காந்திநகர் இடையே உள்ள மணிமுக்தாறு பாதையை காட்டியதால் காரானது ஆற்றில் பாதி தூரம் சென்றபோது, காந்திநகர் அருகே கழிவுநீர் தேங்கி இருந்தது. இதனால் மேற்கொண்டு காரை ஓட்ட முடியாது என்பதால் காரின் ஓட்டினர் காரை மீண்டும் வந்த வழியாக திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது அந்த கார் திடீரென ஆற்று மண்ணில் சிக்கியது. மேற்கொண்டு காரை இயக்க முடியாததால் காரில் வந்த டிரைவர் உள்ளிட்ட ஐந்து பேரும் காரை இறங்கி தள்ள முயற்சித்தனர். ஆனால் கார் சக்கரங்கள் மண்ணில் புதைந்ததால் அங்கிருந்தவர்கள் உதவியுடன் டிராக்டரில் கட்டி இழுத்து காரை மீட்டனர். அதனைத் தொடர்ந்து கார் வந்த வழியாக மீண்டும் சென்றது. கூகுள் மேப் உதவியுடன் வந்த கார் மணிமுக்தாற்றில் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல கடந்த 10 தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து வந்த கார் கூகுள் மேப் காட்டிய வழியாக சென்றதால் இதே போல பூதாமூர் - காந்திநகர் இடையே மணிமுக்தாற்றின் நடுவே சிக்கிய போது காரை அங்கிருந்தவர்கள் மீட்டு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்வழியாக வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு கூகுள் மேப் தவறான வழியை காட்டுவதால் ஆற்றில் இறங்கி விடுவதாகவும், அதனால் நகராட்சி அதிகாரிகள் பூதாமூர் - காந்திநகர் இடையே ஆற்றில் தற்காலிக சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Next Story