விருத்தாசலத்தில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்

விருத்தாசலத்தில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்
தப்பி ஓடிய ஓட்டுனருக்கு போலீஸ் வலை
விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள பகுதிகளில் அனுமதி இன்றி திருட்டுத்தனமாக கூழாங்கற்கள் திருடப்பட்டு வருவதாகவும், திருடப்பட்ட கூழாங்கற்களை விருத்தாசலம் வழியாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரியில் கொண்டு செல்வதாகவும் கடலூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் விருத்தாசலம் நகரத்திற்கு உட்பட்ட ஆலடி ரோடு முடக்கு பகுதியில் புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார், விருத்தாசலம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலடி பகுதியில் இருந்து வேகமாக வந்த லாரி ஒன்றை சோதனைக்காக மறித்த போது லாரியை அங்கே நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் இறங்கி தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து லாரியை சோதனை செய்ததில் லாரியில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி திருட்டுத்தனமாக 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு சென்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஓட்டுனரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story