திருச்செங்கோடு வட்டக் கூட்டம் கோரிக்கை!
Tiruchengode King 24x7 |7 Sep 2024 10:50 AM GMT
திருச்செங்கோடு வட்டக் கூட்டம் கோரிக்கை!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு வட்டக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டப்பொருளாளர் சு.பிரபு தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல் வரவேற்புரை ஆற்றினார். மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் க.சிவக்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் மெ.சங்கர் தொடக்க உரை ஆற்றினார். பள்ளிப்பாளையம் ஒன்றியத்தலைவர் பி.கண்ணன், மல்லசமுத்திரம் ஒன்றியச்செயலாளர் மு.இரவி , திருச்செங்கோடு ஒன்றியத்துணைச் செயலாளர் சீ.நாகராஜ் ஆகியோர் அடையாள வேலைநிறுத்தப் போராட்டக் களப்பணிகள் குறித்து கருத்துரை ஆற்றினர். மாநிலப்பொருளாளர் முருகசெல்வராசன் இயக்கப்பேருரை ஆற்றினார். கூட்ட நிறைவில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் த.தண்டபாணி நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1.மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியத்தினை தமிழ்நாட்டின் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியருக்கு 01.06.2006 முதல் வழங்கிடல் வேண்டும். 2.நிதி மோசடித் திட்டமான புதிய ஓய்வூதியத்திட்டத்தினை (cps) முற்றாக இரத்து செய்துவிட்டு வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத்திட்டமான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ops) 01.04.2003 முதல் ஆசிரியர்-அரசு ஊழியருக்கு தொடர்ந்திடல் வேண்டும். 3.கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விடுப்பூதியம் உரிமையை ஆசிரியர்-அரசு ஊழியருக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் வழங்கிடல் வேண்டும். 4.சட்டமன்றத்தேர்தல் வாக்குறுதியின் படி உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை பள்ளி ஆசிரியருக்கு தொடர்ந்து வழங்கிடல் வேண்டும். 5.தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மாநில பணிமூப்பு முறையை திணிக்கும் அரசாணை எண்:243/நாள்:21.12.2023 முற்றாக இரத்து செய்யப்படல் வேண்டும். 6.ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி இன்றி ஒன்றிய மற்றும் -நகராட்சி பணிமூப்பின் படி பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுகள் வழங்கிடல் வேண்டும். 7.தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி டிட்டோஜாக் மாநில அமைப்பு எதிர்வரும் 10.09.2024 அன்று மேற்கொள்ளும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஆசிரியர்களை முழுமையாக பங்கேற்கச் செய்வது என்று இக்கூட்டம் முடிவாற்றுகிறது. இதே கோரிக்கைகளுக்காக வரும் 29.09.2024, 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய மூன்று நாள்கள் டிட்டோஜாக் மாநில அமைப்பு மேற்கொள்ளும் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருந்து 200 ஆசிரியர்களை பங்கேற்க செய்வதென்று இக்கூட்டம் முடிவாற்றுகிறது. 8.பள்ளிகளில் ஆன்மீகம் மற்றும் நாத்தீகம் சார்ந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் நடைபெறுவதை தடுத்திடும் வகையில் முழுமையான வழிகாட்டும் நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிடல் வேண்டும். 9.சென்னை அசோக்நகர்- சைதாப்பேட்டை பள்ளிச் சம்பவம் குறித்து வெளிப்படையான உண்மை அறிக்கையினை கல்வித்துறை வெளியிடல் வேண்டும். 10..பள்ளிகளில் அறிவியல் உணர்வு மற்றும் பகுத்தறியும் மனப்பாங்கு வளர்த்தெடுக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும். 11.தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறைபாடுகள் கொண்டது - தரம் குறைந்தது எனும் பேச்சுகளுக்கும், கூற்றுகளுக்கும், விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி தரத்தக்க வகையில் புள்ளிவிபரங்கள் - முழுமையான தரவுகள் மற்றும் பிற மாநிலங்களின் கல்வி அடைவுகளின் ஒப்பீடுகளுடன் உள்ளடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படல் வேண்டும். 12.அரசுப்பள்ளிகளின் இணைய இணைப்புக் கட்டணத் தொகையினை கல்வித்துறை நேரடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கிடல் வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Next Story