இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் மறியல்!
Thoothukudi King 24x7 |8 Sep 2024 8:26 AM GMT
கோவில்பட்டியில் இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராகுல். ரயில்வே பணிகளில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வரும் இவருக்கும் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் சங்குபுரத்தைச் சேர்ந்த சங்குசாமி மகள் காயத்ரிக்கும் (23) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் தம்பதி தெற்கு திட்டங்குளம் மேல் காலனியில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ராகுல் பணிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் காயத்ரி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், காயத்ரி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்களாம். இதற்கிடையே காயத்ரி இறந்ததை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். காயத்ரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் ஆய்வாளர்கள் ஜின்னா பீர் முகமது,(கிழக்கு), ராஜாராம்(மேற்கு) மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காயத்ரியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக, அவ்வழியாகச் செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
Next Story