சங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ....
Sangagiri King 24x7 |9 Sep 2024 4:40 PM GMT
சங்ககிரி: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் எண்ம முறையிலான பயிர்க் கணக்கெடுப்புக்கான செயலியில் உள்ள பாதிப்புகளை சீர் செய்யக்கோரி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்ககிரி வட்டக்கிளை செயலாளர் மோகன் தலைமை வகித்து பேசியது:- எண்ம அடிப்படையிலான பயிர்க் கணக்கெடுப்புக்கென பிரத்யேக செயலியில் இது வரை மேற்கொண்ட எந்தவிதமான பதிவுகளையும் பார்வையிட முடியவில்லை. அதிலிருந்து பயிர் வாரியான பரப்பு குறித்த அறிக்கை பதிவிறக்கம் செய்யும்படியாக இல்லை. செயலியில் உள்ள குறைகளை களைய பலமுறை கோரிக்கை வைத்தும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயிர் கணக்கெடுப்புக்கான செயலி இன்னும் சோதனை அடிப்படையில் மட்டுமே உள்ளது. முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இது கணக்கெடுப்புப் பணியை நீர்த்துப்போக செய்து வருகிறது. தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாமலும், மதிப்பூதியம் ஏதுமின்றியும் பயிர்க் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள செய்வதை ஏற்க இயலாது. எனவே எண்ம அடிப்படையிலான பயிர்க் கணக்கெடுப்பு பணியை முழுவதுமாக புறக்கணிக்கிறோம் என்றார். மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் முனியப்பன், குப்புசாமி, சக்தி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story