கலைஞர் அவர்கள் ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக, ஆட்சி அமைத்து செயல்படுத்திக் காட்டினார்! -நாமக்கல்லில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் திருச்சி சிவா பேச்சு
Namakkal King 24x7 |10 Sep 2024 3:44 PM GMT
தென்றல் நடனக் குழுவின் ‘கலைஞரின் குறளோவியம்’ என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது.
தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, நாட்டிற்கே முன்னுதாரணமான பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தினார் என்றும், கலைத்துறையில் எழுதியதை, ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக, ஆட்சி அமைத்து செயல்படுத்திக் காட்டினார் என்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் / மாநிலங்களவை திமுக குழுத்தலைவர் / பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நெகிழ்ச்சியுடன் பேசினார். நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்ற கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், திமுக நாமக்கல் மாவட்ட கிழக்கு செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N. இராஜேஷ்குமார் எம்பி தலைமை வகித்தார். நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டனர். இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக கொள்கை பரப்பு செயலாளர்/ மாநிலங்களவை திமுக குழு தலைவர் / பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக கலை உலகில் தான் கண்ட கனவை ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தி காட்டினார். ஒவ்வொரு திட்டமும் ஏழை எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் அமைய வேண்டும் என்று அறிவித்து அதனை முழுமையாக செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதனால்தான் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் தங்கு தடை இன்றி கிடைக்கப்பெற்று பயனடைந்தார்கள். அவரது வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு புதிய திட்டங்களை முன்னுரிமை கொடுத்து திறம்பட செயல்படுத்தி வருகிறார். மகளிர் காண மேம்பாட்டு திட்டங்கள், மாணவ மாணவிகளுக்கான கல்வித் திட்டங்கள், பெண்களுக்கான சொத்துரிமை, 1990 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கொண்டு வந்த பெண்ணுக்கு சொத்துரிமை திட்டம் இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமாக அமைந்தது என்றும் திருச்சி சிவா எம்பி பேசினார். இதனையடுத்து திமுக செய்தி தொடர்பு செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் T.K.S. இளங்கோவன் பேசும்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் -கொள்கையை கடைபிடிக்காத மாநில அரசர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி தர முடியாது என கூறுகின்றனர். கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளவரை மத்திய மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்றும், போதிய நிதி வழங்க மாட்டோம் எனக் கூறுவது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். எனவே கல்விக்கான நிதி ஒதுக்கீடு வழங்க கோரி திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள் என்றும் திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி கே எஸ் இளங்கோவன் பேசினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலைஞரின் குரளோவியம் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story