காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
Komarapalayam King 24x7 |11 Sep 2024 2:04 PM GMT
குமாரபாளையத்தில் காளியம்மன்கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசித்திருவிழாவில் மகா குண்டம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, வாண வேடிக்கை என களைகட்டும் திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரளும் கோவில் ஆகும். இந்த கோவிலின் அர்ச்சகர் சதாசிவம், 35, நேற்று காலை வழக்கம் போல் 06:00 மணியளவில் கோவில் திறக்க வந்தார். கோவிலின் பக்கவாட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, உண்டியலின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணம் திருடப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. பணம் எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story