விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கியாஸ் வெளியேறியதாக கூறி நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
Virudhachalam King 24x7 |11 Sep 2024 5:20 PM GMT
விஷ வாயு கசிந்ததாக வதந்தி பரவியதால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினம் தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதில் பெண் நோயாளிகள் தங்கி இருந்த வார்டில் இரவு சுமார் 7 மணி அளவில் ஆக்சிஜன் குழாயில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியுள்ளது. அப்போது ஆக்சிஜன் வெளியேறிய சத்தத்தை கேட்ட நோயாளிகள் ஏதோ சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியேறுகிறது என கூறி அதிர்ச்சி அடைந்து தங்களது படுக்கைகளை விட்டு எழுந்து வார்டில் இருந்து வெளியேறி ஓடினர். இதனைப் பார்த்த மகப்பேறு வார்டில் இருந்த கர்ப்பிணி பெண்களும் குழந்தைகள் நலப் பிரிவில் குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்த தாய்மார்களும் தங்களது வார்டுகளில் இருந்து உடைமைகளை அள்ளிக் கொண்டு வெளியே ஓடினர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருந்து விருத்தகிரீஸ்வரர் கோவில் வரை நோயாளிகள் சென்று பீதியில் உறைந்து நின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட வார்டுக்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது பெண்கள் வார்டு பகுதியில் உள்ள ஆக்சிஜன் குழாயில் இருந்து வெளியேறிய ஆக்சிஜனை அடைத்து சரி செய்தனர். பின்பு மருத்துவமனையை விட்டு வெளியேறிய நோயாளிகளை திரும்ப வந்து மருத்துவமனையில் தங்குமாறு அழைத்தனர். அதனைத் தொடர்ந்து நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் உள்ளே வந்து தங்களது படுக்கைகளில் தங்கினர். இந்த சம்பவம் நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தலைமை மருத்துவர் சாமிநாதன் அவர்களிடம் கேட்டபோது பைப்பில் தண்ணீர் இல்லாமல் காலியாக இருக்கும்போது அதில் தண்ணீர் நிரப்பிய உடன் தண்ணீர் வரும்போது ஒரு சத்தம் கேட்கும். அதுபோல காலியாக இருந்த ஆக்சிஜன் குழாயில் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தியவுடன், மருத்துவமனை முழுவதும் பொருத்தியுள்ள செயற்கை சுவாச கருவி பொருத்தும் அனைத்து இடங்களுக்கும் ஆக்ஸிஜன் வாயு செல்லும். அவ்வாறு இந்த கருவியை பொருத்தும் இடத்தில் வால்வு திறந்து இருந்ததால் சத்தம் கேட்டுள்ளது. இதனால் எந்த பிரச்சினையும் கிடையாது. உடனடியாக வால்வு மூடப்பட்டு சரி செய்யப்பட்டது என தெரிவித்தார். பிரசவத்திற்கு தயார் நிலையில் இருந்த கர்ப்பிணி பெண்: பிரசவத்திற்காக ஒரு கர்ப்பிணி பெண்ணை செவிலியர்கள் பெட்டில் படுக்க வைத்திருந்தனர். ஒரு சில நிமிடங்களில் பிரசவம் ஆகும் நிலையில் படுத்திருந்த அந்த கர்ப்பிணி பெண் திடீரென இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் பீதியில் பெட்டில் இருந்து எழுந்து ஓட ஆரம்பித்தார். அவரை செவிலியர்கள் ஒன்றும் பயப்படாதீர்கள். ஆக்சிஜன் தான் வெளியேறியது. பிரச்சனை ஒன்றும் இல்லை என சமாதானப்படுத்தி அவரை மீண்டும் அழைத்துச் சென்று பிரசவத்திற்கு அனுமதித்தனர். மேலும் மருத்துவமனையில் இருந்து விஷ வாயு வெளியேறுகிறது. 2 கிலோமீட்டர் வரை இந்த விஷ வாயுத்தாக்கும் என நோயாளிகள் மத்தியில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story