குடிதண்ணீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
Edappadi King 24x7 |12 Sep 2024 7:19 AM GMT
எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசின் கெயில் நிறுவனத்தின் சார்பாக கேஸ் லைன் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு எடப்பாடியில் இருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையில் கெயில் நிறுவனத்தினர் குழாய் பதிக்கும் போது வீரப்பம்பாளையம் பகுதியில் அப்பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து குடிநீர் பைப்புகளும் சேதப்படுத்தியுள்ளனர்... இதனால் கடந்த 15 நாட்களாக வீரப்பம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு குடிநீர் செல்லாமல் தவித்து வந்தனர். இது தொடர்பாக எடப்பாடி நகராட்சி நிர்வாகம் மற்றும் கெயில் நிறுவனத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் குடிநீர் பைப் லைனை சீர் செய்யும் பணி செய்யவில்லை... இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 50ற்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் எடப்பாடியிலிருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது... இத்தகவலறிந்த எடப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து எடப்பாடி நகராட்சியின் நகர மன்ற தலைவர் பாஷா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சாலை மறியல் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் பைப்புகளை சீர் செய்து குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்து தற்காலிகமாக டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது...
Next Story