அருள்நிதி நடிக்கும் சினிமா படத்தின் திரைப்பட காட்சிகள் படப்பிடிப்பு

அருள்நிதி நடிக்கும் சினிமா படத்தின் திரைப்பட காட்சிகள் படப்பிடிப்பு
சாத்தான்குளம் அருகே அருள்நிதி நடிக்கும் சினிமா படத்தின் திரைப்பட காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இயக்குனர் பிரபு ஜெயராம், சமீபத்தில் இயக்கிய "என்னங்க சார் உங்க சட்டம்" என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. இதனையடுத்து அவர் பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தமிழக விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதியின் சகோதரர் அருள்நிதியை வைத்து புதிய திரைப் படத்தை இயக்கி வருகிறார். பெயர் சூட்டப்படாத இத்திரைப்படம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் திரைப்பட காட்சி படப்பிடிப்பு நடந்து வருகிறது. . அப்பகுதியில் பட்டாசு ஆலை செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து அடுத்துள்ள சாலைப்புதூர் பகுதியில் அப்படத்தின் படப்பிடிப்பு சிகப்பு நிறத்தில் காணப்படும் தேரி மணலில் வைத்து நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர் தொடர்ந்து அதில் பல்வேறு காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது. மேலும் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயம், நெல்லை மாவட்டம் உவரி கப்பல் மாதா ஆலயம் உள்ளிட்ட இடங்களிலும் திரை காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடந்து வரும் பகுதி பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Next Story