சிவகங்கையில் மாணவர்களுக்கான உயர்வுக்குப்படி முகாம்

சிவகங்கையில் மாணவர்களுக்கான  உயர்வுக்குப்படி முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023 -24 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் உயர்கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கான உயர்வுக்குப்படி முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்வுக்குப்படி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறையில் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் தொலைநோக்கு சிந்தனையுடன் எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டிக்கான அடிப்படைடியாக, உயர்வுக்குப்படி முகாமானது இன்றைய தினம் சிவகங்கையில் சிறப்பாக நடைபெறுகிறது. மாணாக்கர்களின் எதிர்கால நலனிற்கு அவர்களின் உயர்கல்வி அடிப்படையாக திகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாணாக்கர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அரசால் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், முதல் பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் மற்றும் சலுகைகள், பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உதவித்தொகை போன்ற திட்டங்கள் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்ட பயன்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களும் இம்முகாமின் வாயிலாக எடுத்துரைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி 100 சதவீதம் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இம்முகாமானது மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக்கழகம் ஆகியவைகளின் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. உயர்வுக்குப்படி முதல் கட்ட முகாமானது, சிவகங்கை மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023 -24 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் உயர்கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெறுகிறது. இம்முகாமின் வாயிலாக மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் தேவையான உதவிகள் குறித்து எடுத்துரைக்கலாம். தங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து, உயர்க்கல்வி பயில்வதற்கு இம்முகாம் தங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். மாணாக்கர்கள் தங்களது ஆர்வத்தின் அடிப்படையில் தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்தெடுத்தல், சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து பயிலுதல், தொழில் படிப்புகள், கல்விக்கடன் பெறுதல் உள்ளிட்டவைகள் குறித்து, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் இம்முகாமில் பங்குபெற்றுள்ள துறைசார்ந்த வல்லுநர்கள் எடுத்துரைப்பார்கள். சிவகங்கை மாவட்டத்தில் 3 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி போன்ற பகுதிகளில் இயங்கிவருகிறது. அதனை தொடர்பு கொண்டும் உடனடியாக நேரடி சேர்க்கையின் அடிப்படையில் சேரலாம். இதேபோன்று, உயர்கல்வி பயில உள்ள மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் , இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் ஐடிஐ நிறுவனங்கள் மூலம் உடனடி சேர்க்கையில் சேர வழிவகை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனை மாணாக்கர்கள் கருத்தில் கொண்டு, தங்களது வாழ்வில் சிறந்து விளங்குவதற்கு அடிப்படையாக உள்ள உயர்க்கல்வியின் முக்கியத்துவத்தினை அறிந்து கொண்டு, தரமான கல்வியை பெற்று, தங்களது பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருந்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயமணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் மற்றும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story