நமக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டால் வெற்றி உறுதி. நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை
Tiruchengode King 24x7 |13 Sep 2024 11:10 AM GMT
நமக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டால் வெற்றி உறுதி. நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை
. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்திடும் வகையில் ”உயர்வுக்கு படி” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கிடவும், எத்தகைய படிப்பிற்கு தற்போது அதிக தேவை உள்ளது உள்ளிட்ட விபரங்களை மாணவ செல்வங்களுக்கு எடுத்துரைத்து அவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்திடும் பொருட்டு ”உயர்வுக்கு படி” உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். கல்வி நம் அனைவரது உரிமை. நீங்கள் அனைவரும் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் முழு கவனம் செலுத்தி, தங்களது வெற்றி இலக்கை அடைய வேண்டும். ஒரு சிலருக்கு மட்டுமே தான் நினைத்த அடையும் சாத்தியக்கூறு அமையும். நீங்கள் அனைவரும் மருத்துவர்கள், பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறைகளில் உயர் அலுவர்களாக உருவாகிட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அனைவரும் தங்களுக்கு கிடைத்த பாடப்பிரிவில் கவனம் சிதறாமல் முழு ஈடுபாட்டோடு பயின்று வெற்றி பெற வேண்டும். எப்பொழுதும் நேர்வழியில் முன்னேறி செல்ல வேண்டும். அதுவே நம் வாழ்வின் சிறந்த வெற்றி பாதையாக இருக்கும். எனது குடும்பம் மருத்துவர்கள் நிறைந்த குடும்பம். அதனால் நானும் மக்களுக்கு சேவையாற்ற மருத்துவம் பயின்றேன். ஆனால் என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் மருத்துவராக சேவையாற்ற இயலவில்லை. இருந்த போதிலும் என் குடும்பத்தினரின் அறிவுறுத்தலின் படி பொது சுகாதார துறையில் வெளியிட்ட அரசுப்பணிக்கு என்னை விண்ணப்பிக்க செய்தார்கள். அதன் பிறகு எனக்கு மருத்துவ கல்லூரியில் பேராசிரியாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சுகாதாரத்துறையில் துணை இயக்குநர் மற்றும் இணை இயக்குநராகவும் பதவி உதவி பெற்று சேவை ஆற்றும் வாய்பை பெற்றேன். அப்போது துணை இயக்குநராக பணியாற்றிய காலத்தில் டெங்கு கொசுக்களை ஒழிக்கவும், இணை இயக்குநராக தேசிய சுகாதார இயக்கத்தில் பணியாற்றிட போது பல்வேறு சுகாதார சேவைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு சார்பில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நாம் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டால் கட்டாயம் வெற்றி பெற முடியும். எனவே மாணவ செல்வங்கள் இன்றைய நவீன உலகில் தங்கள் கவனத்தை சிதறவிடால் படிப்பில் முழுமையாக ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும். தற்போது தொழில் கல்விக்கு அதிக தேவை உள்ளது. எனவே, தேவைகளை அறிந்து அதன்படி கல்வியை தேர்வு செய்தால் வேலை வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிட முடியும். தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. எனவே, நீங்கள் அனைவரும் கட்டாம் உயர்கல்வி பயின்று தொழில் முனைவோர்களாக உருவாகி பலருக்கு நீங்கள் வேலைவாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என தனது வாழ்த்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் வெஸ்லி அவர்கள் தொழில் கல்வி குறித்தும், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி பொருளியல் துறை தலைவர் திருமதி புவனேஸ்வரி ஆகியோர் மாணவர்களுக்கான உயர்கல்வி பயில ஊக்கம் அளிப்பது குறித்தும் கருத்துரை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து, இம்முகாமில் அரசு தொழில்பயிற்சி நிலையம், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வேறு தனியார் கல்லூரிகள், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசு துறையின் சார்பில் உயர்கல்வி திட்டங்கள் குறித்த அரங்குகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு இ - சேவை மையம் என மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இமயவரம்பன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.மகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் திரு.முருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி பொ.மா.ஷீலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார், உட்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story