எடச்சித்தூரில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவர் அடித்துக் கொலை
Virudhachalam King 24x7 |13 Sep 2024 5:25 PM GMT
மனைவி, மகன் உள்ளிட்ட மூன்று பேர் கைது
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாய மகன் தட்சிணாமூர்த்தி (வயது 51). விவசாயியான இவருக்கும் அதே உரை சேர்ந்த செண்பகம் என்பவருக்கும் திருமணம் ஆகி, 24 வயதில் மகளும், 16 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது போதையில் செண்பகத்திடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் 12ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகில் உள்ள மோட்டார் கொட்டகையில் வைத்து குடிபோதையில் செண்பகத்திடம் தகராறு செய்த தட்சிணாமூர்த்தியை, அவரது மனைவி செண்பகம் (40), தட்சிணாமூர்த்தி மகன் விஸ்வநாதன் (16), சிவசங்கரன் மகன் பாலமுருகன் (46) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கட்டை கழியாலும் பிவிசி பைப்பாலும் தட்சிணாமூர்த்தியை அடித்து மோட்டார் கொட்டகையில் இருந்து அருகில் இருந்த அவரது வீட்டிற்கு தூக்கிச் சென்று வீட்டில் வைத்து தட்சிணாமூர்த்தியை பூட்டிவிட்டு மூவரும் பாலமுருகன் வீட்டிற்கு சென்று தூங்கி விட்டனர். நேற்று காலை 8 மணிக்கு செண்பகம் தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது தட்சிணாமூர்த்தி இறந்து கிடந்துள்ளார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தட்சிணாமூர்த்தியின் பிரேதத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தட்சிணாமூர்த்தியின் மனைவி செண்பகம், அவரது மகன் விஸ்வநாதன், மற்றும் பாலமுருகன் உள்ளிட்ட மூவரையும் பிடித்து கைது செய்து மங்கலம்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரையே மனைவியும், மகனும் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story