திருச்செந்தூர் ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிப்பு!
Thoothukudi King 24x7 |15 Sep 2024 5:59 AM GMT
நாளுக்கு நாள் வருமானம் அதிகரித்து வந்தாலும் திருச்செந்தூர் ரயில் நிலையம் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பயணிகள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த சில வருடங்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், முக்கிய திருவிழா காலங்களிலும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் வந்து செல்லும் அளவுக்கு திருச்செந்தூரிலிருந்து கூடுதல் ரயில்களும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் ரயில்களை நம்பி வரும் பயணிகள் பலர் போதிய ரயில் இல்லாததால் ஏமாற்றடைகின்றனர். கோயிலுக்கு வருவதற்கும், திரும்பி செல்வதற்கும் தாமதமாகிறது. இதுமட்டுமின்றி திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். விஷேச நாட்களில் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரயில்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் சாந்தக்குமார் கூறுகையில், திருச்செந்தூரிலிருந்து நெல்லை, மதுரை, பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டுக்கு இயக்கப்படும் ரயிலில் எப்போதும் கூட்டம் நிறைந்து வழிந்து கொண்டே செல்கிறது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது தென்னக ரயில்வே. கூடுதலாக 5 பெட்டிகள் இணைத்தால் இவர்களுக்கு என்ன கஷ்டம் என்று தெரியவில்லை. தென்னக ரயில்வேயில் வருமானத்தை கூட்டுவதற்கு என்று அதிகாரிகள் இருக்கார்களா? இல்லையா? பயணிகள் விகிதாச்சாரத்தை சரிபார்த்து கூடுதல் பெட்டிகள் இணைப்பதில் இவர்களுக்கு என்ன கஷ்டம் என்று தெரியவில்லை. மேலும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டிய நிலையில் உள்ள இந்த தென்னக ரயில்வே, கூடுதல் பெட்டிகளையும் இயக்க மறுப்பதன் உள்நோக்கம் என்ன. வட மாநிலங்களில் அதிக ரயில்கள் இயக்கினாலும், ரயில்வே துறைக்கு அதிக லாபம் கொடுப்பது தென்னக ரயில்வேதான். அதிக லாபம் ஈட்டினாலும், புறக்கணிக்கப்படுவது தமிழகத்தின் தெற்கு பகுதிதான். இதேபோல் உடன்குடி அனல்மின்நிலையம், குலசை இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் என்று இந்த பகுதி முழுவதும் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், திருச்செந்தூர்-நெல்லை இருவழித்தட பாதை பணியை இன்னும் ஏன் துவங்கவில்லை. திருச்செந்தூருக்கு ஏராளமானோர் வந்து செல்வதால் திருச்செந்தூர் ரயில் நிலையத்தின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இங்கிருந்து புதிய ரயில் சேவை துவங்குவதற்கும், ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும், இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் பிளாட் பாரத்தின் நீளத்தை நீட்டிக்கவும் தெற்கு ரயில்வே எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மொத்தத்தில் வருமானம் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் ரயில் நிலையம் மற்றும் வழித்தடங்களில் உள்ள ரயில்நிலையங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றார். அதிகாலையில் ரயில் இயக்க வேண்டும் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு அதிகாலை 6 மணிக்கு ஒரு ரயில் இயக்கினால் நெல்லையிலிருந்து சென்னை, மும்பை செல்லும் ரயில்களில் செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். ஒரு மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்க வேண்டும். திருச்செந்தூர்-நெல்லை-தென்காசி இடையே இமோ ரயில் இயக்க வேண்டும். இதேபோல் திருச்செந்தூரிலிருந்து சென்னை, கோவை மற்றும் வட மாநிலங்களுக்கு புதிய ரயில் சேவை துவங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story